117. அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில்
இறைவன் பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பூங்குழல்நாயகி
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், அன்னம் பொய்கை
தல விருட்சம் புன்னை
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் அம்பர்ப் பெருந்திருக்கோயில், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'அம்பல்' என்று அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பேரளம் அடுத்துள்ள பூந்தோட்டம் எனும் ஊரிலிருந்து 3 கி. மீ. தெலைவு. சாலையோரக் கோயில். கோயில் வளைவு பார்த்து உள்ளே செல்ல வேண்டும். அம்பர் மாகாளத்திலிருந்து 2 கி.மீ. திருவாரூர் மற்றும் பேரளத்திலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.
தலச்சிறப்பு

Ambar Gopuramஒருசமயம் திருமால், பிரம்மா இருவருக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இருவரும் சிவபெருமானின் அடி முடி தேடிச் சென்றனர். பிரம்மா அன்னப் பறவை வடிவெடுத்து முடியைத் தேடிச் சென்று கண்டுபிடிக்க முடியாததால் பொய் உரைத்து இறைவனின் சாபத்திற்கு உள்ளானார். சாப விமோசனம் கேட்க, சிவபெருமானும் புன்னை வனம் சென்று பூஜை செய்து வழிபட்டால் சாபம் தீரும் என்று அருளினார்.

பிரம்மாவும் புன்னை வனமாக இருந்த இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி வழிபாடு செய்து சாப விமோசனம் அடைந்தார். பிரம்மா அன்ன வடிவம் கொண்டு உண்டாக்கிய தீர்த்தமாதலால் இத்தல தீர்த்தத்திற்கு பிரம்ம தீர்த்தம் மற்றும் அன்னம்பொய்கை என்ற பெயர்கள் உண்டானது. பிரம்மாவுக்கு இறைவன் காட்சிக் கொடுத்த நிகழ்வு மாசி மகத்தன்று நடைபெறுகிறது.

Ambar Praharamமூலவர் 'பிரம்மபுரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், பெரிய லிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். மூலவர் பின்புறம் சோமாஸ்கந்த வடிவிலும் காட்சி தருகின்றார். அம்பாள் 'பூங்குழலம்மை' என்னும் திருநாமத்துடன் காட்சித் தருகின்றாள். சிறிய வடிவ அம்மன்.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், மகாலட்சுமி, சரஸ்வதி, கோச்செங்கட்சோழன், நடராஜர் சன்னதிகள் உள்ளன.

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று. இங்கு மேலே மாடக்கோயிலில் சுவாமியும், அம்பாள் கீழேயும் தரிசனம் தருகின்றனர்.

Ambar Somasimaranசோமாசிமாற நாயனார் வழிபட்டு முக்தி பெற்ற தலம். அம்பர் மாகாளம் கோயிலில் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று சோமாசிமாற நாயனார் யாகம் செய்த நிகழ்வு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அன்று மதியம் சுவாமி புலையர் வடிவத்திலும், அம்பாள் கள் பானையுடனும், சோமாசிமாற நாயனார், அவர் மனைவி சுசீலா, சுந்தரர், பரவையார் ஆகியோருடன் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. அம்பர் பெருந்திருக்கோயிலுக்கும், அம்பர் மாகாளத்திற்கும் இடையில் உள்ள அச்சந்தீர்த்த விநாயகர் கோயிலில் சோமாசிமாற நாயனார் யாகம் செய்த இடம் உள்ளது. அங்கு சென்று யாகம் நடைபெறுகிறது.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com